கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிராவுடனான பேருந்து சேவைகளை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைக்க மத்தியப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, மத்திய பிரதேசத்துக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையேயான பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மார்ச் 21 முதல் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டன. மத்தியபிரதேச மாநிலத்தில் போபால், இந்தூர், ஜபல்பூர், பெத்துல், சிந்த்வாரா, கார்கோன் மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை ஏப்ரல் 15 வரை மூடவும் அரசு உத்தரவிட்டது.
இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 74,383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,22,21,665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,62,927 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் 39,544 புதிய கொரோனா நோய்த்தொற்றுகளுடன் மொத்த எண்ணிக்கை 28,12,980 ஆக உயர்ந்தது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு இம்மாநிலத்தில் பதிவாகியிருக்கிறது.