இந்தியா

மத்திய பிரதேசம்: பட்டப்பகலில் துணிகரம் - துப்பாக்கி முனையில் 16 கிலோ தங்கம் கொள்ளை

webteam

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில், திரைப்பட பாணியில் தனியார் கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் 16 கிலோ தங்கம், ரூ.3.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்னி ரங்கநாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்கவானில் அமைந்துள்ள தங்கக் கடன் நிறுவனத்திற்கு, நேற்று காலை 10.30 மணி அளவில், முகக்கவசம் அணிந்தபடி வந்த 6 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 16 கிலோ தங்கம் ரூ.3.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் அருகே உள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோல்டு லோன் நிறுவன விற்பனை மேலாளர் ரோஹித் கோஷ்டி கூறுகையில், காலை 10.30 மணியளவில் முகமூடி அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் வங்கி வளாகத்திற்குள் நுழைந்தவுடன் துப்பாக்கி முனையில் அனைவரையும் தாக்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.