பிரவீன் சோனி x page
இந்தியா

ம.பி. இருமல் மருந்து விவகாரம் | கைது செய்யப்பட்ட மருத்துவருக்கு ஜாமீன் மறுப்பு!

கோல்ட்ரிஃப் இருமல் சிரப் இறப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பிரவீன் சோனிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Prakash J

கோல்ட்ரிஃப் இருமல் சிரப் இறப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பிரவீன் சோனிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 20 குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பல குழந்தைகளுக்கு ’கோல்ட்ரிஃப் சிரப்’ இருமல் மருந்தை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பின்னர் ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் இறந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது, பின்னர் ஆய்வகச் சோதனைகளில் ஆன்டிஃபிரீஸ் மற்றும் பிரேக் திரவங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமான டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது.

cough-syrup

இதையடுத்து, அம்மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளரான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இதற்கிடையே, கோல்ட்ரிஃப் இருமல் சிரப் இறப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பிரவீன் சோனிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மருந்து நிறுவனத்திடமிருந்து மருந்தைப் பரிந்துரைத்ததற்காக மருத்துவர்10% கமிஷன் பெற்றதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. விசாரணையின்போது, ​​மருந்தை விளம்பரப்படுத்துவதற்காக நிறுவனத்திடமிருந்து 10% ஊதியம் பெற்றதாக மருத்துவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 4 வரை ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகளுக்கு டாக்டர் சோனி இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் குழந்தை மரணம் பதிவாகியுள்ளது. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலையான டோஸ் காம்பினேஷன் (FDC) மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள போதிலும், பாதகமான எதிர்விளைவுகளைக் கவனித்தபிறகும், டாக்டர் சோனி தெரிந்தே பல குழந்தைகளுக்கு இந்த இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார் என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

cough syrup

ஆனால் இதை மறுத்த மருத்துவர் பிரவீன் சோனியின் வழக்கறிஞர், ’இருமல் மற்றும் சளி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க கோல்ட்ரிஃப் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மருந்தின் உருவாக்கம் அல்லது தரத்திற்கு மருத்துவர் பொறுப்பேற்க முடியாது’ என்றும் டாக்டர் சோனியின் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், நச்சுப் பொருட்கள் இருப்பதை அறியாமல் சோனி நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிரப்பை பரிந்துரைத்ததாகவும் வாதிட்டார். இதை ஏற்காத நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரது, ஜாமீன் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.