இந்தியா

மத்தியப் பிரதேசம்: ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போலீசார் மீது சரமாரி தாக்குதல்

JustinDurai

 மத்தியப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக வந்த போலீசாரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ளது ஜிதர் கெடி கிராமம். இங்கு அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சஞ்சய் சாஹு தலைமையிலான குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) அக்கிராமத்திற்கு சென்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமவாசிகள் சிலர் கும்பலாக சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக வந்த குழுவினர் மீதும் புல்டோசர் மீதும் கற்களை வீசத் தொடங்கினர்.

இந்த கும்பல் பாதுகாப்புப் பணிக்காக வந்த போலீசாரையும் தாக்கத் தொடங்கியது. ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் சிறுவர்களும் கூட கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு போலீசாரை சராமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன போலீசார் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

வீடியோ ஒன்றில் புல்டோசர் மீது பெண்கள் கற்களை எறிந்து, அதன் கண்ணாடியை உடைக்கும் காட்சியை காண முடிகிறது. இந்த தாக்குதலில் 9 காவலர்கள் மற்றும் ஜேசிபி டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து,  தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு உஜ்ஜைன் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தோஷ் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.