இந்தியா

காங்கிரஸ் அரசுகளுக்கு ஆபத்தா ? எம்எல்ஏக்களை பாதுகாக்க முதலமைச்சர் தீவிரம்

காங்கிரஸ் அரசுகளுக்கு ஆபத்தா ? எம்எல்ஏக்களை பாதுகாக்க முதலமைச்சர் தீவிரம்

webteam

மக்களவைத் தேர்தல் படுதோல்வியால் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியால் ஆபத்தான சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 இடங்களில் மட்டும் வென்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு பாஜகாவால் ஆபத்தான சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.மத்தியப்பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வி காரணமாக அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அங்கு மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றிவிட்டது. நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இத்தகைய சூழலில், அண்மையில் மாநில ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதிய பாரதிய ஜனதா, சிறப்பு சட்டப்பேரவைக்கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் கமல்நாத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் தனது அமைச்சரவையில் உள்ள 27 அமைச்சர்களும் தலா ஐந்து எம்எல்ஏக்களுக்கு பாதுகாவலர் போன்று இருக்குமாறு கமல்நாத் அறிவுறுத்தியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கமல்நாத் இத்தகைய ஆலோசனையை வழங்கியிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், மத்தியப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.