மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை ANI
இந்தியா

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை; 52 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டும் நேர்ந்த சோகம்!

Prakash J

மத்தியப் பிரதேசம் மாநிலம் செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் நேற்று முன்தினம் திறந்த நிலையில் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குழந்தையை பத்திரமாக மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பொக்லைன், ஜே.சி.பி. வாகனங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தில் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

சிறுமி 30 அடி ஆழத்தில் முதலில் சிக்கியிருந்த நிலையில், மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் அருகில் உள்ள பகுதியை தோண்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 20 அடி ஆழத்திற்குக் கீழ் முழுவதும் பாறைகளாக உள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. ஆம்புலனஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் சிறுமி 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

மீட்பு பணி குறித்து சேஹூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் திவாரி, “ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள பெண் குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஸன் வழங்கப்பட்டு வருகிறது. கடினமான பாறை காரணமாக துளையிடுவதில் சிரமங்கள் உள்ளது" என்றார்.

தொடர்ந்து இரவு, பகல் பாராமல் கடந்த 3 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புப் படையினர் இன்று, 52 மணி நேர போராட்டத்திற்கு குழந்தையை மயங்கிய நிலையில் மீட்டனர். அக்குழந்தை மருத்துவ சிகிச்சைக்காக உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து வந்த ரோபோடிக் குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த குழந்தை இறந்துவிட்டதாகத் தற்போது செய்தி வெளியாகி உள்ளது.