பைஜ்நாத் சிங், கமல்நாத்
பைஜ்நாத் சிங், கமல்நாத் twitter
இந்தியா

மீண்டும் தாய்வீடு; 400கார்கள் புடைசூழ காங்கிரஸில் இணைந்த பாஜக நிர்வாகி! சைரன் ஒலியால் எழுந்த சிக்கல்

Prakash J

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரு கட்சிகளும் தற்போதே அங்கு பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில், பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பிரசாரத்தை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநில ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் பைஜ்நாத் சிங். இவர், அப்பகுதியில் செல்வாக்குமிக்க நபராக அறியப்படுகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது, பாஜகவைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் அவரது கட்சியில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பைஜ்நாத் சிங்கும் பாஜகவில் இணைந்தார்.

அன்றுமுதல் பாஜகவிற்காக கடுமையாக உழைத்துவந்த பைஜ்நாத் சிங், வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில் தமக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அதற்கான எந்த தடயங்களும் அக்கட்சியிலிருந்து அவருக்குக் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த பைஜ்நாத் சிங், அதிரடி முடிவெடுத்தார். இதனால், மீண்டும் தாய் வீட்டுக்கே பயணமானார். இதற்காக அவரது பகுதியான ஷிவ்புரியில் இருந்து தலைநகர் போபாலில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் வரையிலான சுமார் 300 கி.மீ தூரத்திற்கு தன் ஆதரவாளர்களுடன் 400 கார்களில் சாலையில் ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக் விஜய் சிங் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். இதில், சில கார்கள் சைரன் ஒலி எழுப்பியபடி கடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், சில கார்கள் சைரன் ஒலி எழுப்பியபடி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்படி, அவசரகால சேவைகளை வழங்கும் வாகனங்கள் (ஆம்புலன்ஸ், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை) மட்டுமே சாலையில் சைரன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில் பைஜ்நாத் சிங்குடன் சென்ற சைரன் ஒலி எழுப்பிய கார்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் பாஜ்பாய், “சைரன் ஒலியுடன் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுதான் காங்கிரஸ் தலைவர்களின் மனநிலை. தெருக்களில் விஐபி கலாசாரத்தை அகற்றியவர் பிரதமர் மோடி. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு செல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.