மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் பிரஹலாத்சிங் கோஷி என்பவர் கடந்த 17ம் தேதியன்று மதியம் 2 மணியளவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் தனது காரில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற காரானது வீட்டில் இருந்து 500 மீ தொலையில் உள்ள ஒரு திருப்பத்தில் திரும்புகையில், எதிர்பாராவிதமாக அங்கு அமர்ந்திருந்த நாயின் மீது மோதியுள்ளது.
இருப்பினும் நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. பின்னர், அந்த நாய் குறைத்துக் கொண்டே காரை நோக்கி ஓடியுள்ளது. ஆனால், கார் வேகமெடுத்து பறந்துவிட்டது. கோஷியும் அதன் பிறகு திருமணநிகழ்வில் பங்கேற்றுவிட்டு அன்று இரவு 1 மணி அளவில் வீடு திரும்பி இருக்கிறார்.
மறுநாள் காலையில், கோஷி காரை பார்க்கையில் காரின் முன்பக்கம் அநேக நகக்கீறல்கள் இருந்துள்ளது. இது ஏதோ குழந்தைகளின் வேலையாக இருக்கும் என்று நினைத்த கோஷி அதன்பிறகு அந்த சம்பவத்தை மறந்து விட்டிருந்தார்.
இரு நாட்கள் கழித்து வேறொரு சம்பவத்திற்காக அவர்களின் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களைப் பார்வையிட்டபொழுது, ஆச்சர்யமளிக்கும் சம்பவம் ஒன்றை கண்டுள்ளார்.
ஆம்... இவர்கள் திருமணநிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய சமயம், இவர்களின் காரில் அடிப்பட்ட அதே நாய், அன்று இரவு இவர்களின் வீட்டிற்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பகுதியை தனது கால் நகங்களாக ஆக்ரோஷமாக கீறியது தெரியவந்தது.
இச்சம்பவம் கோஷிக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. காரணம் அன்று மதியம் நாயின் மீது மோதிய காரை நினைவுக்கூர்ந்து பழிக்கு பழி வாங்கும் விதமாக அன்றிரவு தனது காரை தேடி வந்து ஆக்ரோஷமாக தன் நகங்களைக்கொண்டு கீறிய வீடியோவை பார்த்து ஆச்சர்யமடைந்த கோஷி, அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்... இப்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.