இந்தியா

அமைச்சர்களிடம் கட்டாய ராஜினாமா.. ம.பி.யில் ஆட்சியை காத்துக் கொள்வாரா கமல்நாத்?

அமைச்சர்களிடம் கட்டாய ராஜினாமா.. ம.பி.யில் ஆட்சியை காத்துக் கொள்வாரா கமல்நாத்?

PT

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை என செல்வாக்கு மிக்க தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதனால் டெல்லி சென்றிருந்த மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விட்டு அவசரமாக போபால் திரும்பினார். இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் அமைச்சரவையை கூட்டினார் கமல்நாத். இதில் 20 அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய கமல்நாத், மாஃபியா உதவியுடன் யாரும் தனது அரசை வீழ்த்துவதை அனுமதிக்கமுடியாது எனக் கூறினார். இதனையடுத்து அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் மத்தியப் பிரதேச அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 230 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்எல்ஏக்களும், பாரதிய ஜனதாவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் அரசுக்கு 4 சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்எல்ஏவும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெறுவது உறுதி. எனினும் மூன்றாவது எம்பி பதவிக்கான தேர்தலில் கடும் போட்டியே நிலவுகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதாவும் தனது எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.