இந்தியா

இந்தியாவில் இருந்து வெளியேறும் நிறுவனம்... மூடப்படும் மெழுகுச்சிலை அருங்காட்சியகம்

Sinekadhara

இந்தியாவில் இருந்து மெர்லின் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் வெளியேறுவதால் டெல்லியில் அவர்கள் அமைத்துள்ள மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெழுகுச் சிலை அருங்காட்சியகம் மூடப்படுகிறது.1835 ஆம் ஆண்டு மேரி துஸாட்ஸ் என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்ட மேடம் துஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் டோக்கியோ உள்ளிட்ட உலகின் 22 முக்கிய நகரங்களில் கிளைகள் அமைத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு அந்நிறுவனம் 23 ஆவது கிளையாக டெல்லியில் ஒரு அருங்காட்சியகத்தை அமைத்தது.

இங்கு பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களின் தத்ரூபமான மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் அது நிரந்தரமாக மூடப்படுவதாக அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளையை அமைத்திருந்த லண்டனைச் சேர்ந்த பங்கு நிறுவனமான மெர்லின் என்டர்டைன்மென்ட் இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதால் இந்த அருங்காட்சியகம் மூடப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.