இந்தியா

’Corona Be Like: என்ன கொஞ்சம் திரும்பி பாருங்க’ : ஆஃபருக்காக மாலில் குவிந்த கேரளாட்டீஸ்!

JananiGovindhan

முன்பெல்லாம் தள்ளுபடி என்றாலே ஆடி தள்ளுபடிதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது மாதத்திற்கு ஒரு தள்ளுபடி, சீசனுக்கு ஒரு தள்ளுபடி என காணும் இடமெல்லாம் தள்ளுபடியாய் அறிவிப்பதால் கொரோனா உட்பட எந்த நோய் பரவல் குறித்த அச்சமும், தெளிவும் இல்லாமல் மக்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே போகிறது.

அந்த வகையில் கேரளாவின் பிரபல லுலு மாலில் Midnight sale என்ற பெயரில் கிட்டத்தட்ட மாலில் உள்ள அனைத்து கடைகளிலும் 50 சதவிகிதம் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் பலரும் ஆஃபரில் பொருட்களை வாங்குவதற்காக லுலு மாலுக்கு படையெடுத்திருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோக்கள் பலவும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பலரது கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

ஏனெனில், அண்மை நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருவதால், மத்திய மாநில அரசுகள் சார்பில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கேரளாவில் நாள் ஒன்றுக்கு மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் லுலு மால் நிர்வாகம் மிட்நைட் சேல் என்ற பெயரில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டத்தை சேர்த்திருந்தது பலரையும் முகம் சுழிக்கச் செய்திருக்கிறது.

இதனை கண்ட இணையவாசிகள் பலரும் கேரளாவின் கருப்பு நாள் இது என்றும், கொரோனா பரவல் முற்றுப்பெறாத நிலையில் லுலு மால் நிர்வாகம் இத்தகைய அறிவிப்பை விடுத்தது பொறுப்பற்ற நிலையையே காட்டுகிறது எனவும் காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதனிடையே “எந்த ஒரு டிராஃபிக் கெடுபிடிகளும் இல்லாமல் இரவு நேர ஷாப்பிங்கில் மக்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்ற எண்ணத்தோடுதான் இந்த மிட்நைட் ஷாப்பிங் திட்டத்தை முன்னெடுத்தோம்” என லுலு மால் நிர்வாகத்தின் மண்டல இயக்குநர் ஜோய் ஷந்தானன்ந்தன் கூறியிருக்கிறார்.