L&T நிறுவனர் முகநூல்
இந்தியா

ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு; 90 மணி நேர சர்ச்சையில் சிக்கிய நிறுவனரின் அறிவிப்பு!

L&T நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வாரத்திற்கு 90 மணி நேரம் பணி செய்ய வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய L&T நிறுவனத் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே கேரளா, பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் சம்பளத்தோடு கூடிய மாதவிடாய் விடுப்பை அறிவித்திருக்கும் மாநிலங்கள். அதேப்போல பல இந்திய நிறுவனங்களும் தங்கள் பெண் ஊழியர்களை ஆதரிப்பதற்காக மாதவிடாய் விடுப்பு கொள்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன .

அவைகளில், Zomato : 2020 முதல் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய கால விடுப்பை வழங்கியிருக்கிறது. ஸ்விக்கி: மாதவிடாய் விடுப்பு கொள்கையையும் செயல்படுத்தியுள்ளது. போன்றவற்றை குறிப்பிடலாம்.

இந்தவகையில் L&T நிறுவனமும் ( parent group) தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை அறிவித்துள்ளது.

90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று L&T நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான எஸ்.என்.சுப்பிரமணியன் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில், “ ஒவ்வொருவரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்.” என்று கருத்தினை தெரிவித்திருந்தார். இது பலரிடையே கடும் விவாதத்தை தூண்டியது.

இவர்தான் தற்போது மாதவிடாய் விடுப்பு குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

60000 பேர் அதாவது தோராயமாக 9% பெண்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் L&T தலைவர் SN.சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்.

L&T நிறுவனம்தான் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் இது போன்ற அறிவிப்பினை வெளியிடும் முதல் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.