90 மணி நேரம் வேலை குறித்த தனது பேச்சின்போது L&T நிறுவன தலைவர் சுப்பிரமணியன் அவரது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பலை எழுந்தது. இந்த நிலையில், அந்தக் கருத்துக்கு தனது மனைவி வருந்தியதாக, L&T நிறுவன தலைவர் தற்போது பதில் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் வாரம் 6 நாட்கள் வேலை பற்றிய கருத்துகளும் 90 மணி நேரம் குறித்த வேலை பற்றிய விமர்சனங்களும் இன்றுவரை பெரிய ஆளுமைகளிடமிருந்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவன தலைவராக உள்ள எஸ்.என்.சுப்ரமணியன் அவ்வப்போது, அதிக பணி நேரம் குறித்துப் பேசி வருகிறார். அதன்படி, ”லார்சன் & டூப்ரோ நிறுவனம், அதன் ஊழியர்களை ஏன் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வைக்கிறது” என்பது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடப்பாண்டு ஜனவரியில் பதிலளித்திருந்த அவர், “ஞாயிற்றுக் கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களை வேலைசெய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்கிறேன். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், பணிநேரம் குறித்த தனது பேச்சின்போது மனைவியின் பெயரை இழுத்ததற்கு, தனது மனைவி வருந்தியதாக, எல்அண்ட் டி நிறுவன தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தது பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறிய அவர், தான் வேறு விதமாக பேசி இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், "பின்னோக்கிப் பார்க்கும்போது, நான் வேறுவிதமாக பதிலளித்திருக்கலாம். பொதுவாக, நான் எளிதான முறையில்தான் பேசுகிறேன், அதுதான் என் பாணி" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”எனினும், அந்தக் கருத்தை இப்போது நான் திரும்பப் பெற முடியாது. ஆனால், இதேபோன்ற மனநிலையில் இப்போது அந்தக் கேள்வி வந்தால், ஒருவேளை நான் வித்தியாசமாக பதிலளித்திருப்பேன்” எனவும் தாம் மிகுந்த அழுத்தத்தில் இருந்தபோது அந்த கேள்வி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.