வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நாளை காரைக்கால் - மாமல்லப்புரம் பகுதிகளில் கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்று சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இதன்படி, சென்னையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலைக்கொண்டுள்ளது. அடுத்தடுத்து வடமேற்கு திசையில் நகரும் என்று கூறப்படுகிறது. வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும். ஏற்கெனவே காரைக்கால் - மாமல்லபுரத்திற்கு இடையில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சொல்லப்பட்டிருக்கிறது.
பிற்பகலுக்கு மேல் மழையின் வேகம் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உட்பட KTCC என்று கூறப்படும் மாவட்டங்களில் பிற்பகலுக்கு மேல் மழையின் வேகம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தனியார் வானிலை ஆய்வாளர்களை பொறுத்தவரை அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரை சென்னையில் 30 ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை - கடலூர் வரை மிக கனமழை முதல் அதிமிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.