மகாராஷ்டிராவில் மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் திருமணம் நின்றிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதகம், குடும்ப பின்னணி, வருமானம் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்துதான் பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இதில் எதாவது ஒன்று சரியில்லாமல் போய்விட்டால், வாய்த்தகராறில் தொடங்கி இறுதியில் கைக்கலைப்பையே ஏற்படுத்தி திருமணமே தடைப்பட்ட சமீபகால நிகழ்வுகள் பலவற்றை கூறலாம்.
ஆனால், மகாராஷ்டிராவில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு இவை அனைத்தைவிடவும் முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
மும்பை மகாராஷ்டிராவில் முர்திசாப்பூரில் திருமண நிச்சயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துமுடிந்தது.. இந்த நிலையில்தான், கடைசிநேரத்தில் மணப்பெண்ணின் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோர் குறித்தும் நிதிநிலை அறிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இதுகுறித்தான விவரங்களை கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மணமகனும் இதுகுறித்தான அறிக்கைகளை மணப்பெண்ணின் மாமாவிற்கு வழங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், மணமகனின் பெயரில் அதிக கடன் வாங்கியிருப்பதையும் அதை அவர் சரிவர கட்டாமல் இருப்பதையும் அறிந்துள்ளனர்.
இப்படி நிதிநெருக்கடியில் இருக்கும் நபருக்கு ஏன் தங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று யோசித்துள்ளனர் பெண்ணின் குடும்பத்தினர்.
மேலும், இவ்வளவு நிதி நெருக்கடியில் இருக்கும் ஒருவர், எப்படி தங்களது பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்வார்.. என்ற மிகப்பெரிய கேள்வியையும் மணமகனை நோக்கி மணப்பெண்ணின் குடும்பத்தினர் வைத்துள்ளனர். இதனால், திருமணமும் நின்றுவிட்டது.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளநிலையில், இதுகுறித்து கருத்துதெரிவிக்கும் நபர்களில் சிலர், “ முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள்.. அப்படியே வாங்கினாலும், ஒரு கடனை முடித்துவிட்டு அடுத்த கடனை வாங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளனர்.
கடைசி நேரத்தில் சிபில் ஸ்கோரால் திருமணமே நின்ற நிகழ்வு மணமகன் குடும்பத்தினருக்கும் மணமகனுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.