இந்தியா

ஸ்பீக்கர் பிரதர், ஸ்பீக்கர் சிஸ்டர்… ஒலிபெருக்கி மூலம் பாடம் கற்கும் பள்ளிக் குழந்தைகள்!

ஸ்பீக்கர் பிரதர், ஸ்பீக்கர் சிஸ்டர்… ஒலிபெருக்கி மூலம் பாடம் கற்கும் பள்ளிக் குழந்தைகள்!

webteam

உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்று, கல்வியையும் தலைகீழாக மாற்றிவிட்டது. பள்ளிகளின் நேரடி வகுப்பறைகளில் இருந்து வீட்டிலிருந்து ஆன்லைன் கல்வி என காலத்திற்கேற்ப மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் இணைய வசதிகளற்ற கிராமப்புற மாணவர்கள் என்ன செய்வார்கள்?

மகாராஷ்டிர மாநிலத்தில் மலைப்பகுதியில் உள்ள தண்ட்வால் கிராமத்தில் கவலையே படாமல் மைதானத்தில் குழந்தைகளை இடைவெளியுடன் உட்காரவைத்து ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இப்படியும் பாடம் நடத்தலாம் என அவர்கள் கிராமப்புறப் பள்ளிகளுக்கு வழிகாட்டியுள்ளனர்.

இணையவசதி இல்லாத மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துவருவதால், சற்று மாற்றி யோசித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளூர் ஆசிரியர்களுக்கு ஒலிபெருக்கி வழங்கி உதவிசெய்தது. கிராமத்தில் கிடைத்த இடத்தில் வெள்ளை நிறத்தில் வளையமிட்டு, அதில் மாணவர்களை அமரவைத்து காலையில்  பாடங்களை ஆன் செய்கிறார்கள். அங்கு ஆசிரியர்களே கிடையாது. ஒலிபெருக்கி மட்டும்தான்.  

ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடங்களை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் ஆறு கிராமங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடிக்கிடக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கியில் கேட்டுப்படும் கேள்விக்கான பதில்களையும் குழந்தைகள் கூறுகிறார்கள். அதனை ஸ்பீக்கர் பிரதர், ஸ்பீக்கர் சிஸ்டர் என்று செல்லமாக அவர்கள் அழைக்கிறார்கள். பதினோரு வயது பெண் குழந்தை ஜோதி, “ஸ்பீக்கர் பிரதரிடம் பாடம் கற்பதை விரும்புகிறேன்” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.