லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின்
லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் முகநூல்
இந்தியா

தேர்தல் பத்திரம் விவகாரம் - அதிகபட்சமாக வாங்கிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர்!

PT WEB

கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள நிலையில் அவ்விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இவ்விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் அத்தகவல்கள் இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டன. இதன்படி ஏர்டெல்லை நடத்தும் பார்தி குழுமம், முத்தூட் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்ஆர்எஃப், சியட், வேதாந்தா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப் என பல பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ElectoralBonds LotteryMartin

மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம் பெற்றுள்ள ஐதராபாத்தின் மெகா இன்ஜினியரிங் நிறுவனம் 966 கோடி ரூபாய்க்கும், ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் 398 கோடி ரூபாய்க்கும், சுனில் மிட்டலின் 3 நிறுவனங்கள் 246 கோடி ரூபாய்க்கும், பஜாஜ் ஆட்டோ 18 கோடி ரூபாய்க்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இவை தவிர மேலும் பல நிறுவனங்களும் பத்திரங்களை வாங்கியுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் வரையில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

22,217 பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 22,030 பத்திரங்களை கட்சிகள் பணமாக்கியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்தது இந்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தேர்தல் பத்திர வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.