இந்தியா

மக்களவையில் நிறைவேறிய வேளாண் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா..!

webteam

விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாயிகள் பாதுகாப்பு மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதாக்கள் உண்மையில் விவசாயிகளுக்கு ஆபத்தை விளைவிப்பவை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பாதுகாப்பை விவசாயிகள் இழக்க நேரிடும் என்றும் விமர்சித்திருந்தன. இந்நிலையில், பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தள கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மக்களவையில் மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், வேளாண் துறையை கட்டமைப்பதற்காக பஞ்சாபில் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பை, இம்மசோதாக்கள் அழித்துவிடும் என விமர்சித்தார்.

மேலும், மசோதாக்களை திரும்ப பெறாவிட்டால் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருக்கும் தனது கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகுவார் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில், மக்களவையில் மசோதா நிறைவேறியது. அத்துடன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ராஜினாமா செய்துள்ளார். சிரோமணி அகாலி தளத்தின் முத‌ன்மை ஆலோசகர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரோமணி அகாலி தளம் சார்பில் மத்திய அமைச்சரவையில் ஹர்சிம்ரத் கவுர் மட்டுமே இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.