டெல்லி, நொய்டாவில் செக்டர் 55 இல் இயங்கிவருகிறது ஆனந்த் நிகேதன் விருதா என்ற ஆசிரமம். இந்த முதியோர் இல்லத்தில்தான் கண்கலங்க வைக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்ததுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அந்த முதியோர் இல்லத்தின் மோசமான நிலையை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.
அந்த வீடியோவில், வயதான பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்டநிலையில், ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்தான வீடியோ வைரலானநிலையில், அம்மாநில மகளிர் ஆணையமும் நொய்டா காவல்துறையும் கடந்த வியாழன்கிழமை அந்த இல்லத்தில் சோதனை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் பல வெளியே வந்தனர்.
பல முதியவர்கள் அறைகளில் கைகள் கட்டப்பட்டநிலையிலும், சில முதியவர்கள் கட்டத்தின் பேஸ்மண்ட் போன்ற இடங்களிலும், பலர் ஆடைகள் அணியாமலும், பலர் சிறுநீர் மற்றும் மலம் கலந்த ஆடைகளுடனும் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த முதியோர் இல்லத்தை நடத்துவது யார் என்பது தொடர்பான தீவிர சோதனையில் போலீஸார் இறங்கியுள்ளனர். அப்போது, முதியோர் இல்லத்தில் இருந்த ஊழியர் ஒருவர், தன்னை செவிலியர் என்று கூறிக்கொண்டிருப்பதும், முதியர்களின் குடும்பத்தினரிடமிருந்து ரூ. 2.5 லட்சம் நன்கொடை பெற்றிருப்பதும், அவர்களின் உணவு மற்றும் தங்குமிடத்திற்காக மாதத்திற்கு ரூ. 6000 வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து,அந்த முதியோர் இல்லத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டநிலையில், அங்கிருந்த 36 முதியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, ஓரிரு நாட்களிலேயே அருகிலிருந்த அரசு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். முதியோர்களின் பராமரிப்புக்காக இவ்வளவு தொகை செலவு செய்தும் அவர்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.