இந்தியாவின் 13 நகரங்களில் கண்டிப்பாக அடுத்தகட்ட பொதுமுடக்கம் இரண்டு வாரங்களுக்கு செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர், சில தளர்வுகளுடன் நான்கு கட்டங்களாக ஊரட்ங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வியாழக்கிழமை ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்தை கேட்டறிந்தார். இதுகுறித்து நேற்று பிரதமர் மோடியை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியாவின் 13 நகரங்களில் கண்டிப்பாக அடுத்தகட்ட பொதுமுடக்கத்தை இரண்டு வாரங்களுக்கு செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட புதிய தளர்வுகளில், அனைத்து வகையான மத வழிபாட்டு தளங்களையும் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் மால்கள் மற்றும் பெரிய உணவகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு தயாராக இல்லை எனவும் ஏனென்றால் அதன் பெரும்பாலான வழித்தடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மும்பை, டில்லி, அகமதாபாத், தானே, புனே, ஹைதராபாத், கொல்கத்தா / ஹவுரா, இந்தூர்( மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் (ராஜஸ்தான்), சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் (தமிழ்நாடு) ஆகிய 13 நகரங்களின் ஆணையர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஊரடங்கில் எம்.எச்.ஏ இன் வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், “பொதுமுடக்கம் நான்காவது கட்டத்தில் கணிசமாக தளர்த்தப்பட்டுள்ளது. சமூக விலகல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் இப்போது ஒரு வாழ்க்கை முறை என்பதை மக்கள் உள்வாங்க வேண்டும். இனி வரும் பொதுமுடக்கம் முன்பு போல அதிக கட்டுப்பாடுகளோடு விதிக்கப்படாது. ஆனால் மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இந்த பொதுமுடக்கம் என்பதை உணர வேண்டும்” என அதிகாரிகள் கூறுகின்றனர்.