மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முக்கியமான கூட்டணிகள் மற்றும் பிரிவுகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. மும்பை, புனே, நாக்பூர், நாசிக், சோலாப்பூர், தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தமுள்ள 893 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலில் 3 கோடியே 48 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 15 ஆயிரத்து 931 பேர்போட்டியில் உள்ளனர். நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த மாதமே தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணிக்கும், உத்தவ் சிவசேனா, ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி வைத்து களம் காண்கிறது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துக்களம் காண்கிறது. புனே மாநகராட்சியை பொறுத்தவரை பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா ஆகியவை தனித்துப்போட்டியிடுகின்றன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்என்எஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடும் நிலையில் தேசியவாத காங்கிரஸின் இருபிரிவுகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.