பெங்களூரில் 41 நாட்கள் ஊரடங்கிற்குப் பின் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் தனி நபர்கள் இருவர் மது வாங்கிய பில் வைரலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 3ஆம் தேதிக்குப் பின்னர் மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் மதுபானக் கடைகளை நிதி தேவைக்காக திறந்து வருகின்றன.
அந்த வகையில் இன்று கர்நாடக மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் தனி நபர் ஒருவர் ரூ.52,841க்கு மதுபானங்களை வாங்கியுள்ளார். அவர் தனது ஒருமாத சம்பளம் முழுவதற்கும் மதுபானங்களை வாங்கிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்படுகிறது. அத்துடன் அந்த பில் தற்போது பலராலும் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று பெங்களூரில் உள்ள டாலர்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள மற்றொரு மதுபானக்கடையில் தனிநபர் ஒருவர் ரூ.95,347 தனிநபர் ஒருவர் மதுபானங்களை வாங்கியுள்ளார். இந்த பில்-ம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பில்களை பகிர்ந்து பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, அங்கு மது வாங்க 3 மணி நேரம், 2.5 கிலோ மீட்டர் வரை மதுப்பிரியர்கள் வரிசையில் நின்ற காட்சிகள் பகிரப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 7ஆம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.