Representational image
Representational image pt web
இந்தியா

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என்ற பெயர் வைத்த IFS அதிகாரியை பணியிடைநீக்கம் செய்தது திரிபுரா அரசு

Angeshwar G

மற்ற மாநில உயிரியல் பூங்காக்களில் இருந்து விலங்குகளைக் கொண்டுவந்து வேறொரு பூங்காக்களில் வளர்ப்பது வாடிக்கை. இதன்மூலம், வனவிலங்குகளுக்கான இனப்பெருக்க திட்டம் வெற்றிகரமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் செபாஜிலா என்ற உயிரியல் பூங்கா உள்ளது.

இந்தப் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ’அக்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு 6 வயதான பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ ஹிந்து பரிஷத் கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. சிங்கங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த இந்த இருபெயர்களும் பழைய பூங்காவிலேயே சூட்டப்பட்டது. மேற்கு வங்க பூங்காவுக்கு வந்தபிறகு அவைகளுக்கு பெயர் மாற்றப்படவில்லை என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்துத்தான் இந்த வழக்குப் போடப்பட்டது.

விஷ்வ ஹிந்து பரிஷத் தாக்கல் செய்த மனுவில், ’மாநிலத்தின் வனத்துறை சிங்கங்களுக்கு பெயர்களை வழங்கி உள்ளது. அதில் 'அக்பர்' என்ற பெயர் உடன் 'சீதா'வை இணைத்தது இந்துக்களுக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது. அதனால், சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ’சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற மேற்குவங்க அரசு மற்றும் பூங்கா நிர்காகத்திற்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றம், ‘விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்பட உள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மதப் போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம்’ என அறிவுறுத்தியது.

இந்நிலையில், திரிபுரா அரசு மாநிலத்தின், 1994 பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலிடம் பெயர்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இருப்பினும் பிரவீன் லால் அகர்வால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 12 ஆம் தேதி தேதி 2 சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டபோது வனவிலங்கு கண்காணிப்பாளராக இருந்த அகர்வால் பெண் சிங்கத்தை சீதா என்றும் ஆண் சிங்கத்தை அக்பர் என்றும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.