இந்தியா

கிர் காடுகளில் சிங்கங்கள் தொடர் மரணம்: கட்டுப்படுத்த அரசு தீவிரம்

webteam

குஜராத்தின் கிர் காடுகளில் 3 வாரங்களுக்குள் 21 சிங்கங்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க மற்றும் ஆசியச் சிங்கங்கள் என இருவகைப்பட்ட சிங்கங்களில் ஆசியச் சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே இருக்கின்றன. இந்திய அளவில் சிங்கங்களுக்கு புகழ்பெற்ற கிர் காடுகளில் அடுத்தடுத்து சிங்கங்கள் இறந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த 18 நாட்களில் 21 சிங்கங்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பேசிய வனத்துறை அதிகாரி “சிங்கங்களின் உயிரிழப்புகளுக்கு தொற்று நோயும், சிங்கங்களுக்குள் ஏற்படும் மோதலுமே காரணம்” என்று தெரிவித்தார். குறிப்பாக ''சிறுநீரகம், கல்லீரம் ஏற்படும் தொற்று பாதிப்பே சிங்கங்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம். 31 சிங்கங்கள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு தொற்று வைரஸ் பரவுவது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. 1400 ச.கிமீ பரப்பளவு கொண்ட கிர் காடுகளில் 2015 கணக்கெடுப்பின் படி 523 சிங்கங்கள் இருந்தன. தற்போது 600 ஆக அதிகரித்திருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

சிங்கங்களின் உயிரிழப்பு குறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த வன அதிகாரிகள் ''வருடத்திற்கு 100 சிங்கங்கள் இறப்பது இயல்பானது. மழைக்காலங்களில் 31 சிங்கங்கள் வரை உயிரிழந்துள்ளன. சிங்கங்களின் உயிரிழப்பை கட்டுப்படுத்த அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் இறப்பு கட்டுப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

3 வாரங்களுக்குள் அடுத்தடுத்து 21 சிங்கங்கள் உயிரிழந்த சம்பவம் வன அதிகாரிகள், விலங்கு ஆர்வலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.