மும்பை முகநூல்
இந்தியா

மும்பை | சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் 1,200 கோடி முறைகேடு? பில்லி சூனிய சடங்குமா?

தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் இம்மருத்துவமனையில் ரூ.1200 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இங்கு சூனியம் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின்மீது நிதி முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டநிலையில், தற்போது அங்கு சூனியம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலிகான் வீட்டில் ஏற்பட்ட திருட்டில், திருடனால் அவர் தாக்கப்பட்டநிலையில், சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை தற்போது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. இந்த மருத்துவமனையில், பணியாற்றிய முன்னாள் அறங்காவலர்கள் ரூ.1200 கோடி அளவுக்கு நிதி முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில் ஏழு முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் உபகரணங்களை வழங்குபவர்கள் உட்பட 17 பேர் சம்பந்தப்பட்டநிலையில், இவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக என்ன நடந்தது?

இந்தவழக்கில்தான், சமீபத்திய கோர்ட் தீர்ப்பையடுத்து ஏற்கெனவே இருந்த அறங்காவலர்கள் நீக்கப்பட்டு புதிய அறங்காவலர்கள் மருத்துவனையின் பொறுப்பை ஏற்றுள்ளனர். அவர்கள் பொறுப்பை ஏற்றவுடன் நிதி நிலையை ஆய்வு செய்தபோது மருத்துவமனையில் நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பதை புதிய அறங்காவலர் குழு கண்டுபிடித்து இருக்கிறது.

புதிய அறங்காவலர் குழு தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மும்பை போலீஸார் மற்றும் அமலாக்கப் பிரிவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ. ₹1,250 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது.

மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர் பிரசாந்த் மேத்தா கூறுகையில், ''முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் மருத்துவமனையோடு தொடர்புடையவர்கள் மீது ஏற்கெனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது புகாரும் பாந்த்ரா போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பெரிய அளவில் நிதி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்களின் மூலம் இயங்கிவரும் இந்த மருத்துவமனையின் நிதி நோயாளிகளுக்கு சென்றடையவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், துபாய், பெல்ஜியத்தை சேர்ந்த அறங்காவலர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

 சூனியம்?

மேலும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் மும்பையின் முன்னாள் காவல் ஆணையருமான பரம்பீர் சிங் கூறுகையில், ” 2024 டிசம்பரில் மருத்துவமனையில் பணிபுரிந்த சில முன்னாள் ஊழியர்களால் மருத்துவமனையில் இந்த சூனிய சடங்கு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு என கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. எனவே, நாங்கள் அலுவலக அறையை சாட்சிகள் முன்னிலையில் தோண்ட ஆரம்பித்தோம். தோண்டப்பட்டதில், மனித முடி, 8 மண் கலசங்கள், மனித எலும்பு, அரிசி போன்ற பொருட்கள் கிடைக்கப்பெற்றன. அறங்காவலர்கள் அறையில் பழைய அறங்காவலர்கள் பில்லி சூனியம் வைத்துள்ளனர்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் இது தொடர்பாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமல்ல, மும்பையையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.