அயோத்தி வழக்கில் அளித்த தீர்ப்பை மதிப்பது போல, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பாரதிய ஜனதா மதிக்க வேண்டும் என கேரள தேவஸ்வம் போர்டு வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 16-ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஐயப்ப பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வசதிகளை தெரியப்படுத்தும்படி பாஜக எம்எல்ஏ ராஜகோபால் கேட்டுக் கொண்டார்.
மேலும், நாத்திகவாதிகளும், இடதுசாரி செயற்பாட்டாளர்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்ல அரசு அனுமதி அளித்ததே கடந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை குறைய காரணம் என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கடந்த ஆண்டை போல இம்முறையும் சமூக விரோதிகள் சபரிமலைக்கு செல்வதை பாரதிய ஜனதா ஊக்குவிக்க கூடாது என கூறினார். அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று மதித்தது போல, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என வழங்கப்பட்ட தீர்ப்பையும் பாரதிய ஜனதா மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்