இந்திய அரசியலில் உச்சங்களை தொட்ட சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் ஒருவர். இளம் வயதிலேயே தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணத்தை பார்க்கலாம்.
சுஷ்மா ஸ்வராஜ் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சமஸ்கிருதம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற சுஷ்மா, அதன்பின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1970-களில் ஜனசங்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
சட்டப்படிப்பை முடித்ததும் 1973ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார். அவசர நிலைக்குப்பின் பா.ஜ.க.வில் இணைந்த சுஷ்மா முதலில் ஹரியானா மாநில அரசியலில் கவனம் செலுத்தினார். தனது 25ஆவது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே பா.ஜ.க.வின் ஹரியானா மாநிலத் தலைவர் பதவி சுஷ்மாவைத் தேடி வந்தது. ஹரியானா மாநில அமைச்சராக 2 முறை பணியாற்றிய சுஷ்மா, டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 5 முறை மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ள சுஷ்மா மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுஷ்மா போட்டியிடவில்லை. ஓய்வில் இருந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.