இந்தியா

எடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி

எடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி

Rasus

எடியூரப்பா பதவியில் நீடிப்பாரா இல்லையா? அவரது விதி என்ன? என்பது நாளைக்கே தெரிந்துவிடும் என காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பில், நள்ளிரவு 2 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இறுதியாக, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேவேளையில், கடந்த 15-ஆம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், மே 16-ம் தேதி ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து எடியூரப்பாவிற்கு ஆளுநர் எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள வழக்கறிஞர், “நாளை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆட்சி அமைக்க உரிமைகோரி 15-ஆம் தேதி எடியூரப்பா வழங்கிய கடிதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் எல்லாம் அவகாசம் இல்லை. அவர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது ஒருநாளில் தெரிந்துவிடும். அந்த கடிதத்தை தாக்கல் செய்தாலே போதும், எடியூரப்பாவின் நிலை தெரிந்துவிடும்.”என தெரிவித்தார்.