இந்தியா

வங்கிகளில் மோசடி செய்தவர்களை விரட்டிப் பிடிப்போம் : அருண் ஜேட்லி

webteam

வங்கிகளில் மோசடி செய்தவர்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் அவர்களை விரட்டிப்பிடித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ள நிலையில் ஜேட்லி இக்கருத்தை கூறியுள்ளார். நடைபெற்ற குற்றத்தை உரிய நேரத்தில் கண்டறிய வங்கி நிர்வாகம் தவறி விட்டதாகவும் ஜேட்லி தெரிவித்தார். மேலும் விதிமுறைகள் மீறலை கண்டறிய தணிக்கையாளர்களும் தவறிவிட்டனர் என ஜேட்லி குறை கூறினார்.

இனி இது போன்ற மோசடிகளை முன்கூட்டியே கண்டறிய உரிய நடைமுறைகளை கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கிடையில் மார்ச் 5ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ரோட்டோமேக் நிறுவன விவகாரங்களை மிகப்பெரிய அளவில் எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.