இந்தியா

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை

webteam

காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் மிக முக்கியமான தீவிரவாதி ஹைதர் கொல்லப்பட்டார். இந்த மோதலில் இரு ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 5 பேர் வீரமரணமடைந்தனர்.

ஸ்ரீநகரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹந்த்வாரா பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்குள்ள பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர். தகவலறிந்த அங்கு விரைந்த ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும், குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

சண்டையின்போது, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியமான நபரான ஹைதர் உள்பட இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையின்போது, இரு ராணுவ அதிகாரிகள் உள்பட 4 ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவரும் வீர மரணமடைந்தனர். பயங்கரவாதிகளுடனான சண்டையில், பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 5 வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், ஹந்த்வாராவில் எதிரிகளிடம் போராடி உயிர் துறந்த நமது வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை போற்றுவதாக தெரிவித்துள்ளார்.

வீரர்களின் தியாகத்தையும், வீரத்தை இந்நாடு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் என்றும், முழு அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக ஓயாமல் சேவையாற்றி, குடிமக்களை பாதுகாத்திருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.