தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என உள்ளதைப்போல் மாநிலங்கள் அளவில் சட்டப்பேரவை, சட்ட மேலவை என இரு அவைகள் இருக்கும். ஆனால் தற்போது உத்தர பிரதேசம், பிஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே மேலவை உள்ளது. தமிழ்நாட்டிலும் முன்பு சட்டமேலவை இருந்தாலும் அது 1986ஆம் ஆண்டே கலைக்கப்பட்டுவிட்டது.
சட்டப்பேரவைப்போல் மேலவை உறுப்பினர் தேர்வுக்கு பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உரிய தகுதிகளுடன் சிறப்பு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ள பட்டதாரிகள், ஆசிரியர்கள், ஆளுநர்களால் நியமிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பர்.
சட்டப்பேரவை உறுப்பினரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில் சட்டமேலவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக இருக்கும். 6 மாநிலங்களில் 426 மேலவை இடங்கள் உள்ள நிலையில் இவற்றில் 3இல் 1 பங்கு இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்தல் நடக்கும்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆய்வு செய்வது, கொள்கை குறித்த விவாதங்களில் பங்கெடுப்பு, பொதுப்பிரச்சினைகள் குறித்து விவாதம் போன்றவை சட்டமேலவையின் பணிகளாகும். ஆனால் சட்டமேலவை மூலம் ஒரு மசோதா நிறைவேற்றத்தை தடுக்கமுடியாது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அரசின் முடிவுகளை விவாதிப்பது குறிப்பாக வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அரசின் செயல்பாடுகளை விவாதிப்பதே சட்ட மேலவையின் முக்கிய நோக்கமாகும்.