இந்தியா

ஆபாசத்தை தூண்டும் விளம்பரத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது "லேயர் சாட்" நிறுவனம்

ச. முத்துகிருஷ்ணன்

ஆபாசத்தை தூண்டும் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்ட லேயர் சாட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

"லேயர் சாட்" எனப்படும் வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம் ஆபாசத்துடன் இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் பதிவானது. மேலும் விளம்பரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி பெண்கள் நல ஆணையம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருந்தனர்.

இதனையடுத்து  ஆபாசத்தை தூண்டும் வகையில் ஒளிபரப்பப்பட்ட "லேயர் சாட்" எனப்படும் வாசனை திரவிய விளம்பரத்திற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்தது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை வெளியிட்ட லேயர் சாட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக லேயர் சாட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “Layer'r SHOT என்ற பிராண்டான நாங்கள், உரிய மற்றும் கட்டாய ஒப்புதல்களுக்குப் பிறகே, விளம்பரங்களை ஒளிபரப்பியுள்ளோம், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவோ, பெண்களின் நாகரீகத்தை சீற்றம் செய்யவோ அல்லது எந்த விதமான விளம்பரத்தையும் ஏற்படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை. கலாசாரம், சிலரால் தவறாகக் கருதப்படுகிறது. எவ்வாறாயினும், தனிநபர்கள் மற்றும் பல சமூகங்களிடையே கோபத்தை ஏற்படுத்திய விளம்பரங்களுக்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.