உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் வழக்கறிஞர் அசோக் பாண்டே 2021இல் வழக்கறிஞர் அங்கியை அணியாமலும் மேல்சட்டை பட்டன்களை முறையாகப் போடாமலும் விசாரணைக்கு ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள் அவரை வெளியேற உத்தரவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாண்டே, நீதிபதிகளை நோக்கி தகாத சொற்களை பேசியுள்ளார்.
இதையடுத்து பாண்டே மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது . குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கும்படி பலமுறை கால அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி விவேக் சவுத்ரி மற்றும் நீதிபதி பி.ஆர். சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘கடந்த 2017ஆம் ஆண்டின் போது நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் மட்டுமல்லாமல் அவரது கடந்தகால நடத்தை மற்றும் சட்டச் செயல்பாட்டில் ஈடுபட மறுப்பது உள்ளிட்டவற்றுக்கு ஒரு முன்மாதிரியான தண்டனை தேவை. அதன்படி, வழக்கறிஞர் அசோக் பாண்டேவுக்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ” என உத்தரவிட்டனர்.
மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் , லக்னோவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் முன் அவர் சரணடைய நான்கு வாரம் அவகாசம் கொடுக்கப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.