இந்தியா

சர்ச்சையான பிரக்யா சிங் தாக்கூரின் பதவிப் பிரமாணம்

webteam

போபால் தொகுதி எம்பியான பிரக்யா சிங் தாக்கூர் தனது பதவிப் பிரமாணத்தின் போது குருவின் பெயரை பயன்படுத்தியதால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா ஆகியோரும் மக்களவை எம்பியாக பதவியேற்றனர். 

அதன்படி போபால் தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், சமஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார். அப்போது தனது பெயருடன் குருவின் பெயரான பூர்ண சேத்தானந்த் அவ்தேஷானந்த் கிரியின் பெயரை பயன்படுத்தினார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில விநாடிகளுக்குப் பின்னர் மீண்டும் பதவிப் பிரமாணத்தை எடுத்துக்கொண்டார்.

அப்போது தந்தையின் பெயரை குறிப்பிடும்படி பிரக்யா சிங்கிற்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தாம் குருவின் பெயரையே பயன்படுத்துவதாக பிரக்யா சிங் தெரிவித்திருந்தார். இதையடுத்து இடைக்கால சபாநாயகர் தேர்தல் ஆணையர் அளித்த சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்றார். இதனால் இரண்டாவது முறையாக பதவிப்பிரமாணம் தடைபட்டது. அதில் குருவின் பெயர் இடம்பெற்றிருந்தத்தால் பிரக்யா சிங் மூன்றாவது முறையாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.