கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை நிச்சயம் கொண்டுவர வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரம் பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில், பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று பஞ்சாப் ஜலந்தர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “மதம் என்பது தனிநபர் உரிமை சம்மந்தப்பட்டது. கடவுளை வழிபட அனைவருக்கும் உரிமை உள்ளது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கட்டாயம் சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால், அந்த சட்டத்தால் யாரும் தவறாக துன்புறுத்தப்படக்கூடாது. பயம் காட்டி கட்டாய மதமாற்றம் செய்வது தவறு” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது. மேலும், பா.ஜ.க. ஆளும் ஹரியானா மற்றும் அசாமில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.