இந்தியா

விமானத் தாக்குதல் ஏன்? வெளியுறவு செயலர் விளக்கம்!

webteam

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது பற்றி இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, ‘ கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. அவர்களுக்குத் தெரியாமல் பயங்கரவாத பயிற்சி அளிக்கும் முகாம்களை அங்கு அமைக்க முடியாது. முகாம்கள் அமைத்துள்ள இடம் பற்றிய விவரங்களை பாகிஸ்தானுக்குப் பல முறை தெரிவித்தோம். அவர்கள் வழக்கம் போல மறுப்புத் தெரிவித்து வந்தனர். 

(மசூத் அசார்)

இந்நிலையில் இன்னொரு தற்கொலைப் படை தாக்குதலை, நாட்டின் பல பகுதிகளில் நடத்த, ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதற்காக பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர் மவுலானா யூசுப் அசார் தலைமையில் முகாம்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தற்காப்புக்காக இந்திய விமானப்படை அங்கு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  ஜெய்ஷ் இ முகமது பயங்கர வாதி மசூத் அசாரின் மாமனார் உட்பட பலர் கொல்லப்பட்டு ள்ளனர். 

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, பாகிஸ்தானில் 20 வருடத்துக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங் களில் தொடர்பு கொண்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பயங்கர வாதிகளை குறி வைத்தே இந்த தாக்குதலில் இந்தியா ஈடுபட்டது.  இது போர் நடவடிக்கை இல்லை. கட்டாயத்தின் அடிப்படையில் பயங்கர வாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’’ என்று தெரிவித்தார்.