landslide at Munnar  FB
இந்தியா

மூணாறு அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு.. லாரி டிரைவர் உயிரிழப்பு..!

கேரள மாநிலம் மூணாறு அருகே கனமழை காரணமாக, அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொச்சி-தனுஷ்கோடிக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vaijayanthi S

கேரள மாநிலம் மூணாறு அருகே இரண்டு பெரும் நிலச்சரிவுகள் நேரிட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதிகளை இணைக்கும் இடுக்கியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மூணாறில் கடந்த 24 மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் மழைபெய்துள்ளது. இதனால், மூணாறு பழைய அரசு கலைக்கல்லூரி அருகே சனிக்கிழமை இரவு பெரும் நிலச்சரிவு நேரிட்டது. நிலச்சரிவில் சரக்கு லாரி ஒன்று சிக்கிக்கொண்டது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் லாரிஓட்டுநர், அவரது உதவியாளர் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஓட்டுநர் கணேசன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த உதவியாளர் முருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிகாலையில் மீண்டும் ஒரு நிலச்சரிவு நேரிட்டது. வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நிலச்சரிவுகள் காரணமாக சாலையில் மண், பாறைகள் சரிந்து கிடக்கின்றன. மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. மீட்பு பணி முடிவடைய 2 நாட்கள் ஆகும் என்பதால் கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.