இந்தியா

“லாலு பிரசாத் யாதவின் சிறுநீரக செயல்பாடு மோசமடைகிறது”-மருத்துவர் தகவல்

“லாலு பிரசாத் யாதவின் சிறுநீரக செயல்பாடு மோசமடைகிறது”-மருத்துவர் தகவல்

Veeramani

லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் எந்த நேரத்திலும் செயலிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருத்துவர் உமேஷ் பிரசாத் “ லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிலைமை மோசமடையக்கூடும்” என்று தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தின் (ரிம்ஸ்) டாக்டர் பிரசாத் இந்த நிலைமை குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். "யாதவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது என்பது உண்மைதான். இந்த நிலைமை ஆபத்தானது, அவரது சிறுநீரக செயல்பாடு எப்போது வேண்டுமானாலும் மோசமடையக்கூடும். அது எப்போது என்று கணிப்பது கடினம்" என்று தெரிவித்தார். மேலும் "அவருக்கு கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது உறுப்பு சேதமடைவது அதிகரிக்கிறது. இந்த நிலைமை நோயாளியின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது”என்றும் கூறினார்.

"அவரை சிகிச்சைக்காக வேறு எங்காவது அழைத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோதான் முடிவு செய்ய வேண்டும். என் கருத்துப்படி  நீரிழிவுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள உறுப்பு சேதத்தை மீட்கமுடியாது என்பதால், லாலு பிரசாத் யாதவை வேறு எந்த மருத்துவ வசதிக்கும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவரை சிகிச்சைக்காக வெளியே அழைத்துச் சென்றாலும் அதனால் அவரது உடல்நலத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது. நீரிழிவு காரணமாக ஏற்படும் உறுப்பு பாதிப்புகள் மீளமுடியாதவை. சிறுநீரகத்தின் செயல்பாட்டை 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மாற்றும் மருந்து எதுவும் இல்லை. நாங்கள்  ஒரு நெப்ராலஜிஸ்ட்டை அணுகி, லாலு பிரசாத் யாதவின் சிகிச்சையின் மேலதிக போக்கை முடிவு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்