சோனு சூட் உடன் லட்சக்கணக்கானோரின் பிரார்த்தனைகள் உடன் இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட்-இன் மும்பையில் இருக்கும் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் எந்தெந்த ஆவணங்கள் சிக்கியது என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஊரடங்கு காலங்களில் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வரந்தார் நடிகர் சோனு சூட். தவிர, தான் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவும் ஏழைகள், மாணவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
மேலும் அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் சோனு சூட். இதனையடுத்து டெல்லி மாநில அரசின் புதிதாக கல்வி தொடர்பாக துவக்கியுள்ள திட்டத்திற்கு தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சோனு சூட் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் "சோனு சூட் உடன் லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை இருக்கிறது. அந்த மக்கள் கஷ்டப்படும்போது தாராளமாய் உதவிகளை செய்தவர் சோனு சூட்" என தெரிவித்துள்ளார்.