இந்தியா

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் - மத்திய இணையமைச்சர்

rabiyas

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக எந்தவொரு விசாரணையையும் சந்திக்கத் தயார் என மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவினர் கார் மோதியதில் 4 பேரும், இதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தில் 5 பேரும் உயிரிழந்தனர். விவசாயிகள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, பிரியங்கா காந்தி, தீபேந்திர ஹூடா உள்ளிட்ட 11 பேர் மீது சிதாபூர் மாவட்ட காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோர் லக்கிம்பூர் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மகனுடன், தானும் இருந்ததாக கூறுவதில் உண்மை இல்லை,  வன்முறைக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.