லடாக் வன்முறை எக்ஸ் தளம்
இந்தியா

லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. காரணம் என்ன?

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.

Prakash J

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, லேவில் உள்ள பாஜக அலுவலகம் முன், LAB என அழைக்கப்படும் லே உச்ச அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், வாகனங்களையும் கொளுத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதற்றம் நீடிப்பதால் லேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லே உச்ச அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவாக, கார்கில் ஜனநாயக கூட்டணி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.