மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையை லே கூட்டமைப்பு பிரதிநிதிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது லடாக்கில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், வாகனங்களையும் கொளுத்தினர். இதனால் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆயினும் இப்போராட்டத்தின்போது 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதற்கிடையே, போராட்டம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டி, அவருடைய வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது. தவிர, வன்முறை குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். அவரிடம் லடாக் காவல் துறையினரும் மத்திய உளவுத் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையை லே கூட்டமைப்பு பிரதிநிதிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அக்டோபர் 6-ஆம் தேதி ல கூட்டமைப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதனை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள லே கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி அமைப்பினர், வாங்சுக்-கை விடுதலை செய்யவேண்டும் எனவும், தங்கள் போராட்டத்தில் பாகிஸ்தான் சதி இருப்பதாக கூறிய குற்றச்சாட்டையும், திரும்பப் பெற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்.