லடாக் வன்முறை, சோனம் வாங்சுக் எக்ஸ் தளம்
இந்தியா

லடாக் வன்முறை.. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வெளிநாட்டு நிதி பெறும் உரிமம் ரத்து!

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது.

Prakash J

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. அவரின் செக்மோல் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நிதியளிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தன்னுடைய வங்கிக்கணக்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக சோனம் வாங்சுக் தரப்பு தெரிவித்த நிலையில், தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராக நிதி பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், லடாக் மாநில உரிமை கோரிக்கையின் அடையாளமாக விளங்கும் வாங்சுக்கிற்கு எதிராக மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

சோனம் வாங்சுக்

மறுபுறம், லடாக்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள் அரசு சார்பில்லாதவை என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். லடாக் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு மீறிவிட்டதாகவும் இதுவே தங்கள் மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் என்றும் தெரிவித்தார். எனினும் போராட்டத்தின்போது நடந்த வன்முறைகள் எதிர்பாராதவை என்றும் அது நேற்றைய தினத்தை தன் வாழ்க்கையின் சோகமான நாட்களில் ஒன்றாக மாற்றிவிட்டதாகவும் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநில அந்தஸ்து மூலம் அதிகாரம் பெறுவதுடன் தனித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் லடாக் பழங்குடிகள் விரும்புகின்றனர்.

லடாக் வன்முறை

மேலும் திரிபுரா உள்ளிட்ட 4 பழங்குடியின மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரசமைப்பு சாசனத்தின் 6ஆவது பிரிவு அந்தஸ்து தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்கின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.