லடாக் யூனியனை, தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டுமென, மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார் சோனம் வாங்சூக். இவரைப் பற்றியும் இவரது போராட்டம் குறித்தும் பார்க்கலாம்.
1947ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சமஸ்தானங்களை இணைக்கும் பணியில் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஈடுபாட்டர். ஆனால், ஹைதரபாத் மற்றும் ஜூனகட் சமஸ்தானங்களை போலவே ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த ஹரிசிங் என்ற மன்னரும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு மறுப்பு தெரிவித்தார். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, நிபந்தனைகளுடன் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து, 1948 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகளை கொடுக்கும் சட்டப்பிரிவு 370 இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
அந்த 370 சட்டப்பிரிவின்படி, இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்திருந்தாலும் இந்தியாவின் அரசியலமைப்பு காஷ்மீருக்கு பொருந்தாது, காஷ்மீருக்கு என தனி அரசியலமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். தொடர்ந்து காஷ்மீருக்கு என தனி கொடியையும் வைத்துக்கொள்ளலாம் எனவும் அந்த சட்டப்பிரிவு அனுமதியளித்தது. மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைக் கலைக்க முடியாது போன்ற சிறப்பு சலுகைகளையும் காஷ்மீர் பெற்றிருந்தது.
இந்தநிலையில் தான், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, 2019இல் ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை கொடுப்பது நாட்டில் பிரிவினையை உருவாக்குவது போல இருக்கிறது என பாஜக தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த, ரமோன் மகசேசே விருதுபெற்ற, காலநிலை ஆர்வலரும் கல்வியாலருமான சோனம் வாங்சூக், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். லே தன்னாட்சி குழுவின் உறுப்பினர்கள் 6 பேரும் அவரது போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
லே தன்னாட்சிக் குழுவுக்கு கடந்தமுறை தேர்தல் நடந்தபோது, மாநில அந்தஸ்து வழங்கப்படுமென அளிக்கப்பட்ட வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என வாங்சூக் குற்றம்சாட்டியுள்ளார். காந்தி ஜெயந்தி வரையிலான 35 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாக வாங்சூங் தெரிவித்துள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்தும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்தும், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவர் 21 நாள்கள் உண்ணா நோன்பு இருந்தது நினைவுகூரத்தக்கது.