சோனம் வாங்சுக் எக்ஸ் தளம்
இந்தியா

லடாக் வன்முறை |கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக்.. பாகி.யுடன் தொடர்பா.. தீவிர விசாரணை?

கைது செய்யப்பட்டுள்ள லடாக் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடன் தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Prakash J

கைது செய்யப்பட்டுள்ள லடாக் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடன் தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

லடாக் வன்முறை

இந்த நிலையில், சமீபத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது லடாக்கில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், வாகனங்களையும் கொளுத்தினர். இதனால் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆயினும் இப்போராட்டத்தின்போது 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். பின்னர், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, போராட்டம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டி, அவருடைய வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது. ஆனால் வன்முறைக்கு தாம் பலியாக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், வன்முறை குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் லடாக் காவல் துறையினரும் மத்திய உளவுத் துறையினரும் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே சோனம் வாங்சுக் ராஜஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சூக்

வாங்சுக்கிற்கு பாகிஸ்தான் தொடர்புள்ளதா என விசாரிக்கப்படும் என்றும் லடாக் காவல்துறை கூறியுள்ளது. இதற்கிடையே வாங்சுக் கைதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க லடாக்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சோனம் வாங்சுக்கை கைது செய்வது மூலம் லடாக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவந்துவிடலாம் என மத்திய அரசு தப்புக்கணக்கு போட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மத்திய அரசு தனது அனைத்து ஆயுதங்களையும் வாங்சுக் மீது ஏவுவது கவலை தருவதாக லடாக் காங்கிரஸ் தலைவர் நவங் ரிக்சின் ஜோரா தெரிவித்தார். லடாக் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவரான வாங்சுக் மகாத்மா காந்தியின் பாதையை பின்பற்றுபவர் என்றும் நவங் ரிக்சின் ஜோரா தெரிவித்தார். வாங்சுக் கைதுக்கு CPI பொதுச்செயலாளர் D.ராஜா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே லடாக் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), எஸ்டி சிங் ஜம்வால் கூறுகையில், “சமீபத்தில் அவர் குறித்து செய்தி வெளியிட்ட ஒரு பாகிஸ்தான் பிஐஓ (உளவுத்துறை செயல்பாட்டாளர்)-ஐ நாங்கள் கைது செய்துள்ளோம். வாங்சுக்கின் பாகிஸ்தான் வருகை குறித்து அவர் கேள்வி எழுப்பினார், அவர் பாகிஸ்தானில் ஒரு டான் (மீடியா ஹவுஸ்) நிகழ்வில் கலந்துகொண்டார். எனவே, அவர் மீது ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது”என்று கூறினார்.