எஸ்.என்.சுப்ரமணியன் x page
இந்தியா

“வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; அதற்கு அரசின் திட்டங்களும் காரணம்” - L&T நிறுவன தலைவர் பேச்சு!

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்காக இடம்பெயரக்கூட கட்டடத் தொழிலாளர்கள் விரும்புவதில்லை” என L&T நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Prakash J

லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவன தலைவராக உள்ள எஸ்.என்.சுப்ரமணியன் அவ்வப்போது, அதிக பணி நேரம் குறித்துப் பேசி வருகிறார். முன்னதாக, "ஞாயிற்றுக்கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களை வேலைசெய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்வினையாற்றினர்.

எஸ்.என்.சுப்ரமணியன்

இந்த நிலையில், “ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்காக இடம்பெயரக்கூட கட்டடத் தொழிலாளர்கள் விரும்புவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “சமீபகாலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவிர, அவர்கள் வேலைக்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புலம்பெயர்வதைக்கூட விரும்புவதில்லை. இதற்கு, அரசாங்கம் செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களும் ஒரு காரணமாக உள்ளது.

நாடு வளர்வதற்கு சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவது முக்கியமானது. ஆனால் தொழிலாளர் பற்றாக்குறையால் அது கடினமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.