பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங். கடந்த 1999-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 20ஆண்டு சிறை தண்டனை பெற்ற குர்மீத் சிறையில் உள்ளார்.
இதையடுத்து ராம் ரஹீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி செய்தி வெளியிட்டதால் கடந்த 2002 - ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2003 - ஆம் ஆண்டு சாமியார் குர்மித் ராம் ரஹீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது பத்திரிகையாளர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சாமியாருக்கு தண்டனை விவரம் ஜனவரி 17 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
2 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே சாமியார் குர்மித் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.