இந்தியா

கும்பமேளா சென்று வருவோர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்: டெல்லி அரசு

Veeramani

ஹரித்துவார் கும்பமேளா கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதால் அங்கு சென்றுவருவோர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு இடையே உத்தரபிரதேச மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் மட்டும் 43 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலானோர் எந்தவித கொரோனா கட்டுப்பாடுமின்றி புனித நீராடினர். கும்பமேளாவுக்கு சென்றவர்களிடம் நடத்திய பரிசோதனையில் முதல்கட்டமாக 2 ஆயிரத்து 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஹரித்துவார் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பல சாதுக்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், கும்பமேளா கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இருப்பதால் அங்கு சென்றுவிட்டு வந்தவர்கள் கட்டாயம் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து கும்பமேளாவுக்கு செல்ல இருப்போர் அரசிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.