மகா கும்பமேளா முகநூல்
இந்தியா

மகா கும்பமேளா | டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 18 பேர் பலி!

டெல்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

PT WEB

டெல்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லியில் இருந்து செல்லும் ரயிலை பிடிக்க ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். நடைமேடை 14 மற்றும் 15-இல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்திருந்தனர். ரயில் வரும் என கூறப்பட்ட நடைமேடைக்கு பதில் வேறு நடைமேடையில் ரயில் வந்ததால் பயணிகள் முந்தியடித்து சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே காவல் துறையுடன் காவல் துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து பயணிகள் கூட்டத்தை சீர் செய்து, 4 சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே தெரித்துள்ளது.

முன்பதிவு செய்யப்படாத ஆயிரத்து 500 டிக்கெட்கள் விற்பனையானதாகவும், அதிகளவு பயணிகள் வருகை மற்றும் இரண்டு ரயில்கள் வருவதில் ஏற்பட்ட தாமதமே விபத்துக்கு காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மகா கும்பமேளாவுக்கு செல்ல ஏராளமானோர் வருகை தரும் நிலையில், போதிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

ஏற்கனவே ரயில்களை சேதப்படுத்துவதும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அதிகளவில் பயணிகள் ஏறுவதும் நடந்து வரும் சூழலில், இச்சம்பவமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

”இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.