கும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம்
நிலவியது.
உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்தனர். இதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என உத்தர பிரதேச பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில்
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது, மகா கும்பமேளா உயிர்பலி குறித்து, குடியரசுத் தலைவரே தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்
என்றும் விவாதத்தில் கேள்வி எழுப்பலாம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.
ஆனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உங்கள் கோரிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கவில்லை என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பேச அனுமதிக்கவில்லை என்று கூறி, அவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.